செந்தமிழ்சிற்பிகள்

நா.பார்த்தசாரதி (1932 - 1987)

நா. பார்த்தசாரதி

(1932 - 1987)

 

அறிமுகம்

நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

 பிறப்பு

தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார்.

 பணி

பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார். 1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.

 விருதுகள்

சமுதாய வீதி -  சாகித்ய அகாதமி பரிசு

துளசி மாடம் - ராஜா சர் அண்ணாமலை பரிசு

கம்பராமாயணத் தத்துவக் கடல் - தமிழ்நாடு பரிசு

 நா.பார்த்தசாரதியின் படைப்புகள்

நெடுங்கதைகள், குறிஞ்சி மலர், பொன் விலங்கு, நிசப்த சங்கீதம், கபாடபுரம், சாயங்கால மேகங்கள், மணிபல்லவம் பருவம் : 1 2 3 4 5, ஆத்மாவின் ராகங்கள், ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, துளசி மாடம்

பாண்டிமாதேவி, நித்திலவல்லி, வஞ்சிமாநகரம், சத்தியவெள்ளம், வெற்றி முழக்கம், சுந்தரக்கனவுகள், நெஞ்சக்கனல், பிறந்த மண், நெற்றிக் கண், வெற்றி முழக்கம் (உதயணன் கதை), நிசப்த சங்கீதம், அநுக்கிரகா, சுலபா, முள்வேலிகள், புதுமுகம், மூலக்கனல், மலைச் சிகரம், பொய் முகங்கள்,  மணிபல்லவம் (சரித்திர நாவல்) 1 - 5